top of page

நீலகிரியின் தோடர் கட்டுமான நிபுணர்கள்

​

உலகெங்கிலும் வாழ்கின்ற சுதேச மக்கள் இயற்கையுடன் ஒன்றிணைந்த  வாழ்க்கைமுறைக்குப் பெயர்பெற்றவர்கள். உயிர்ப்பல்வகைமை மற்றும் இயற்கை வளங்களைப் பெரிதும் மதிப்பதால், அவற்றை பாதுகாத்து வருகின்றனர். . இயற்கை விதிகளை மீற முயற்சி செய்யும் போது அவர்களுடைய எதிர்கால சந்ததிகள் எதிர்நோக்கக்கூடிய கேடான விளைவுகளை அவர்கள் மரபு ரீதியாக உணர்ந்துகொண்டிருக்கிறார்கள்.


அதே போல, அவர்களுக்கே உரிய கட்டிட வடிவமைப்பு உத்தி மூலம் அங்கே கிடைக்கக்கூடிய பொருட்களைப் பயன்படுத்தி காலநிலை மாற்றங்களைத் தாங்கி நிற்கக்கூடியவாறு தங்குமிடங்களை உணர்வார்ந்த முறையில் கட்டமைக்கின்றன. தமிழ்நாட்டில் வாழ்கின்ற அவர்களைப்போன்ற ஒரு பழங்குடி மக்களைப்பற்றி இனி விரிவாகப் பார்க்கலாம்.

​

தோடர்கள் என்பவர்கள் தமிழ்நாட்டிலே நீலகிரி மலைத்தொடரில் வாழ்கின்ற ஒரு  பழங்குடி இனத்தவர்கள் ஆவர். இந்தியாவிலே இருக்கின்ற மிகப்புராதனமான பழங்குடி இனத்தவர்களில் ஒருவராவார். தலா ஒவ்வொருவரும் நூற்றுக்கணக்கான எருமைகளை சொந்தமாக வைத்திருந்து, அவற்றை அவர்களின் வாழ்க்கையின் ஓர் அத்தியாவசியமான அங்கமாகத் நிகழ்த்தினர். அவர்களுடைய அனைத்து நிலங்கள், வளங்கள் மற்றும் எருமைகள் யாருக்கும் தனியாக சொந்தமானதில்லை. மாறாக அவை அனைத்தும் அனைவருக்குமே சொந்தமானதாகும். சமுதாயத்தில் தற்சார்பு வாழ்வியலில் தோடர்கள் மிகச்சிறந்த வாழும் உதாரணங்கள் ஆவர்.

​

Toda vault

ஐவகை நிலத்திணைகளிலே நீலகிரி மலைகள் குறிஞ்சி வகைத்திணையாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. குறிஞ்சித்திணையான நீலகிரி மலைகள் மேற்குத்தொடர்ச்சி மலைகளின் நடுவே அமைந்துள்ளது. தமிழ்நாட்டின் பொதுவான வெப்ப - ஈர மண்டல காலநிலைக்குப் புறம்பாக தனித்தன்மை பொருந்திய தென்னிந்தியக் குளிர்காலநிலை கொண்ட பகுதிக்கு உதாரணமாக நீலகிரி விளங்குகின்றது. நீலகிரி மலைகள் வருடம் முழுவதும் குளுமை மற்றும் மூடுபனி நிறைந்ததாக காணப்படுகின்றது. இங்கே ஆனி மாதம் தொடங்கி புரட்டாதி மாதம் வரை கடும் காற்று மற்றும் உயர் ஈரப்பதனுடன் கூடிய மழைக்காலம் நிலவும்.

​

தோடர் இனத்தவர்கள் இயற்கையை ஆராதிப்பதில் பண்பாடுடையவர்களாகவும் சமயரீதியாக பஞ்சபூதங்களை வணங்குபவர்களாகவும் உள்ளனர். குலமரபின் வழி தோடர்கள் கண்டிப்பான சைவ உணவுப்பழக்கம் உடையவர்களாக இருப்பதுடன் அவர்கள் வேட்டையாடுதல் மற்றும் போர்களில் எப்போதும் ஈடுபட்டிருக்கவில்லை. அவர்களின் பிரதான உணவுகள் காடுகள் மற்றும் கழனிகளில் மேற்கொள்ளப்படும் அறுவடைகளில் தங்கியுள்ளது. அவர்கள் பரந்த அளவில் காலநிலையைத் தாங்கி வளரக்கூடிய நரிவால் தினை, சிறு தினை, ராகி, முத்துத் தினை, அவர்களின் நிலம் சார்ந்த காய்கறிகள், பலவகை மலைசார்ந்த அரிசி இனங்கள், நறுமணத்திரவியங்கள், தேன் மற்றும் பழவகைகளை பயிர்செய்கின்றனர். ஒரே துண்டுத்துணியில் உடலைச்சுற்றிக் கொள்ளக்கூடியவாறு அவர்களின் பாரம்பரிய உடை வடிவமைக்கப்பட்டிருக்கும். தோடர் இனப்பெண்கள் தமது மேலங்கிகளைத் தாமே துடிப்பான சிவப்பு மற்றும் நீல நிறங்கள் கலந்த வடிவங்கள் கொண்டு கலையம்சத்துடன் நெய்வர். அவர்களின் தோடர் மொழியும் தனித்தன்மையுடன் காணப்படுவதுடன், அவர்களின் கட்டிடக்கலைகளிடையேயும் தனித்தன்மைகள் உள்ளன. தோடர்கள் தமது கட்டுமானங்களை தமக்குக் கிடைக்கக்கூடிய உள்ளூர் வளங்களைப் பயன்படுத்தித் தாமே செய்து கொள்ளக்கூடியவர்கள்.

​

தோடர்களின் இயற்கைவழிக் கட்டுமானங்கள்

 

தோடர்கள் மலைகளைச் சுற்றிலும் வெவ்வேறு சிறு குடியிருப்புக்களாக பரம்பலடைந்து உள்ளதுடன் அச் சிறு குடியிருப்புக்கள் ஒவ்வொன்றும் உறைவிடங்கள், கோவில்கள் மற்றும் எருமைகள் பாதுகாக்கப்படும் அடைப்பிடங்கள் என்பவற்றைக் கொண்டுள்ளன. இத்தகைய தோடர் வாழுமிடத்தை "மந்த்" என்று குறிப்பிடுவர். மிகப்புராதனமான "முத்தநாடு" என்ற கோபுரக்கோவில் அம்மைந்துள்ள அவ்வாறானதொரு பகுதியான "தலகுந்தா" என்ற இடத்திற்கு நாம் ஒருமுறை விஜயம் செய்திருந்தோம்.

Toda vault
Toda vault

 

அவர்கள் பிரதானமாக இரண்டு வடிவங்களில் கட்டிடங்களை நிர்மாணிக்கின்றனர்.

1. வில் வளைவான கட்டிடங்கள் (அவை மூன்போ எனவும் அழைக்கப்படும்) 2. கூம்பு வடிவான கோவில்கள் (அவை பொழ்வாஷ் எனவும் அழைக்கப்படும்). அநேகமான

வில் வளைவான கட்டிடங்கள் குடியிருப்பு அலகுகளாக காணப்படும் எனினும் சில பகுதிகளில் நீங்கள் வில் வளைவான கட்டிட அமைப்பில் கோவில்களையும் காணமுடியும். கூம்பு வடிவமான கட்டமைப்புக்கள் பிரத்தியேகமாக புனிதமான கோவில்களைக் குறிக்கின்றன. இன்றை வரை தோடர்களுடைய கோவில்கள் எவ்வித மாற்றங்களும் இன்றி உள்ளன.

 

தோடர்களின் இயற்கைக் கட்டிட அமைப்புகள்  உழைப்பு, கைவினைத்திறன் மற்றும் காலநிலை மாற்றங்களுக்கு ஈடுகொடுக்கும் தன்மை என்பன கொண்டமைந்தன. அவர்களுடைய பிரதான கட்டிட நிர்மாணத்திற்கான மூலப்பொருட்கள் ஆவன ; மரங்கள், கற்கள், மூங்கில், பிரம்பு, புற்கள், களிமண் மற்றும் எருமைச்சாணம் என்பனவாகும். இவ் அனைத்து மூலப்பொருட்களும் அவர்களின் ஆளுகைக்கு உட்பட்ட பிரதேசங்களில் இருந்து எடுக்கப்படுகின்ற போதிலும் அச் சமுதாயத்தில் உள்ள ஒவ்வொருவரும் தத்தமது உடல் உழைப்பைப் பயன்படுத்திப் கட்டிடங்களை நிர்மாணம் செய்ய முனைவர்.

 

வில்வளைவான கட்டிடங்கள் முப்பரிமாண அளவிடையில் அண்ணளவாக 18 அடி நீளம் மற்றும் 9 அடி அகலம் மற்றும் 10 அடி உயரத்தையும் கொண்டவை. அவற்றின் முகப்புப் பகுதி மற்றும் பின்பகுதி ஒரு சிறிய கதவை மட்டும் கொண்ட பெரிய கற்றூண்களால் அமைக்கப்பட்டிருக்கும். முந்தைய காலங்களில் இக் கட்டமைப்பு மரங்களால் அமைக்கப்பட்டிருந்தாலும், தற்காலத்தில் அச்செயன்முறை வழக்கொழிந்து விட்டது.

 

கற்களுக்கு மேலே உள்ள கூரைப்பகுதியானது, அரைவட்ட வடிவில் அமைக்கப்படும். அது மூங்கில் மற்றும் பிரம்பினால் பின்னிச் செய்யப்பட்டதாகும். மூங்கில் நாணல்கள் ஒன்றாக இணைகின்ற போது அவை அதி உயர் இழுவைத் தாங்கு திறன் கொண்டதாக மாறுகின்றன. அத்திறனானது இக்கட்டமைப்பினை ஒன்றாக இறுகப்பற்றிப்பிடித்து வைத்திருக்க உதவி புரிகின்றது. இறுதியாக அரைவட்டக் கூரையானது காய்ந்த மொத்தமான புற்களால் வேயப்பட்டு மறைக்கப்படுகின்றது.

Toda dwelling

இக்குடியிருப்புப்பகுதியிலே சமைத்தல் / நெருப்பிடம், உணவருந்துதல் மற்றும் சயனம் செய்தல் போன்ற செயற்பாடுகளின் பொருட்டு 3 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அத்துடன் சிறிய அளவிலான சேமிப்பின் பொருட்டும் தானியங்களை இடித்துத் தூளாக்கும் பொருட்டும் வேறு சில பகுதிகளையும் அமைத்துள்ளனர். தோடர்களின் வீடுகளுக்கு வெளியே அயலவர்கள் இடையே சமூகப்பிணைப்பை ஏற்படுத்தும் வகையில் மக்கள் அமர்ந்து உரையாடக்கூடிய வகையில் உயரமான திண்ணைகள் அமைக்கப்பட்டிருக்கும்.

 

தோடர்களின் குடியிருப்புப் பகுதியில் உள்ள அனைத்துக் கட்டுமானங்களும் அவற்றின் வாசல் பகுதி காலையில் உதயமாகும் சூரிய ஒளியை உள்வாங்கக் கூடிய வகையில் வடக்கு - கிழக்குத் திசையை நோக்கிக் கட்டப்படுள்ளது. அரைப் பீப்பாய் வடிவான கட்டங்கள் இயற்கையாகவே உயர் காற்றோட்டத்தைத் தாங்க வல்ல திறன் கொண்டது.

 

இந்தப் பீப்பாய் வடிவக்கட்டமைப்பின் அடிப்பகுதியில் தோராயமாக 3 அடி நீளம் மற்றும் 3 அடி அகலங்களில் சிறியளவிலான வாசற் கதவுகளே உள்ளதனால் அதனுள் உட்செல்பவர்கள் சற்றுக் குனிந்தவாறே செல்ல முடியும். குறிஞ்சி மலைப்பகுதியில் யானைகள், புலிகள், கரடிகள் மற்றும் குரங்குகள் போன்ற காட்டு விலங்குகளினால் எப்பொழுதும் ஆபத்துக் காத்திருக்கும். அதனால் இத்தகைய சிறிய அளவிலான வாசல் கதவுகள் காட்டு விலங்குகளிடமிருந்து அவர்களைப் பாதுகாத்துக் கொள்ள எப்போதும் முக்கியத்துவம் வாய்ந்ததாகின்றது. கட்டிடத்தின் உட்புறத்தை வெப்பமாக வைத்துக்கொள்ள நெருப்பிடம் உதவுகின்றது. வீட்டின் வாசல் கதவுகள், கற்கள் மற்றும் கூரையில் உள்ள மொத்தமான புற்கள் என்பவை வெப்பத்தை இலகுவாக வெளியேற விடாமல் தடுப்பதுடன் குடியிருப்பின் உட்புறத்தை எப்பொழுதும் வெப்பமாக வைத்துக்கொள்ள உதவும். அத்துடன் இச்சிறிய கதவுகள் வெளிநபர்களிடமிருந்து அவர்களின் அந்தரங்கங்களைப் பாதுகாப்பதையும் உறுதி செய்கின்றது.

 

இக்கட்டிட நிர்மாண முறைமைக்கு மேலதிகமாக வேலியிடல் மற்றும் பூச்சுப்பூசுதல் உத்திகள் இங்கே பரவலாக்க் கையாளப்படுகின்றன. கட்டிடச்சுவர்கள் வழக்கமாக கற்கள், களிமண் மற்றும் கம்புகள் கொண்டு அமைக்கப்படுகின்றது.

Wattle and daub technique

தோடர்கள் மிகவும் புராதனமான வடிவங்கள் மற்றும் சுவரோவியங்களைத் தம்மகத்தே கொண்டவர்கள். தோடர்களுடைய கோவில்களில் உள்ள சுவர்கள் முழுவதும் புனிதமான எருமைகள் மற்றும் பால்வீதி வளையங்களைக் குறிக்கும் அடையாளங்கள் வரையப்பட்டிருக்கும். ஒவ்வொரு வடிவங்களும் இயற்கை மற்றும் அவர்களின் நாளாந்த சுழற்சிச்செயற்பாடுகளைப் பொருள்படுமாறு வரையப்பட்டிருக்கும்.

Toda vault

இன்று பல மாற்றங்களின் காரணமாக தோடர்களின் குடியிருப்புக்கள் முழுவதுமாக சீமெந்துத்தரை மற்றும் ஓட்டு வீடுகளாக மாற்றமடைந்துள்ளன. தற்காலத்தில் தோராயமாக 1500 தோடர்கள்,  குறைவான எண்ணிக்கையில் எருமைகளை வளர்க்கக்கூடியவர்களாக எஞ்சி உள்ளனர். தோடர்கள் ஊட்டியில் உள்ள பொதுமக்கள் சமுதாயத்தில் ஓர் அங்கமாக மாறியுள்ளதுடன் அவர்கள் நவீன வாழ்க்கை முறைக்கும் பழக்கப்பட்டுள்ளார்கள். அவர்கள் வருடாந்தம் தமது சடங்குகள், குடும்ப விழாக்கள் மற்றும் கலாச்சாரப் பண்டிகைகளின் பொருட்டு ஒன்று கூடி தமது சம்பிரதாயங்களைப்ப போற்றி மகிழ்கின்றனர்.

bottom of page